அரசியல் கட்சிகளுக்கு பெருநிறுவனங்கள், தனிநபர்கள் நன்கொடை வழங்குவது வழக்கமான ஒன்று. கடந்த 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக 139 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களிலேயே, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்தான் அதிகபட்சமாக மூன்று கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
20,000க்கு மேலாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தாக வேண்டும். ஜனவரி 5ஆம் தேதிக்கு முன்பாக, நன்கொடையாளர்களின் பட்டியை காங்கிரஸ் சமர்பித்திருந்தது. தற்போது, அந்தப் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலானோர் 50,000 ரூபாய் முதல் 54,000 வரையில்தான் நன்கொடை வழங்கியுள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் 54,000 ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, 50,000 ரூபாய் வழங்கியுள்ளார். அதிகப்பட்சமாக, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரூடென்ட் எலக்டோரல் டிரஸ்ட் 31 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அடுத்தபடியாக, பிஸ்னல் ஹவுஸ் ஐடிசி 13 கோடி ரூபாயும் அதன் கிளையான ஐடிசி இன்போடெக் 4 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சிக்கு 146 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 60 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை யாருமே நன்கொடையாக வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.