நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான வளர்ச்சி விகிதத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் சர்மா பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில், "விவசாயிகள் அறுவடையில் ஈடுபடும் காலம் என்பதால் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை ஈட்டிருக்க வேண்டும்.
திருவிழா காலம் என்பதால் தேவையும் அதிகம் இருக்கும். ஆனால், மொத்த உள்நாட்டு வளர்ச்சி பின்தங்கியுள்ளது. நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் எப்போதும் நல்ல வளர்ச்சியைக் காணலாம். ஆனால், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு வளர்ச்சி தேக்கம் கண்டுள்ளது. தற்போது இருப்பதுபோல் அல்லாமல் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும். திசையற்ற நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு இதனால் பயனில்லை.
பொருளாதாரம் மீண்டெழும் என்னும் அரசின் வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை. அந்நிய நேரடி முதலீடு குறித்து அரசு வெளியிடும் தகவல்களால் நாடு பயனடையவில்லை. அதன் செயல்பாடு மோசமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை அரசு சிதைத்துள்ளது. அரசியலில் பயன்பெற உண்மை தரவுகளை மத்திய அரசு மறைக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: சிக்கன் உண்டு கொரோனா பீதியைத் துடைத்தெறிந்த தெலங்கானா அமைச்சர்கள்!