புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள், அதன் கிளையான காரைக்கால் ஜிப்மரில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை நாடு முழுவதிலிருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 467 பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 7ஆம் தேதி வெளியானது.
பின்னர் ஜூன் 26ஆம் தேதி அகில இந்திய பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கும், நேற்று புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று புதுச்சேரி பொதுப்பிரிவு ஓபிசி, எஸ்சி, எஸ்டி, என்ஆர்ஐ பிரிவினருக்கும் கலந்தாய்வு அகடாமி சென்டர்களில் துவங்கியது. முதற்கட்டமாக மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. இதில், புதுச்சேரி ஒதுக்கீட்டில் பொதுப் பிரிவில் உள்ள 30 இடங்களுக்கு 300 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 190 பேர் கலந்துக் கொண்டனர். இதில் சில வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருந்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
புதுச்சேரி ஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ள வெளிமாநிலத்தவர்களின் பெயர்களை நீக்கி கலந்தாய்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்கத்தினர் ஜிப்மர் நிர்வாக இயக்குநரிடம் மனு அளித்தனர். அதன் மீது ஜிப்மர் நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தை நாட பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.