புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், ”கடைவீதிகளில் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல் பொதுமக்கள் அதிக அளவு நடமாடுவதால், கரோனா நோய்த் தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதால், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் அனைத்து கடைகளும் காலை ஆறு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
அதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை ஆறு மணி முதல் இரண்டு மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். பால் விற்பனை நிலையங்கள் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை செயல்படலாம்” உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர, மருந்தகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமர்ந்து உண்ணும் உணவகங்களுக்கு காலை ஆறு மணி முதல் மதியம் இரண்டு மணி வரையும், பார்சல் முறையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்வதற்கு இரவு எட்டு மணி வரையும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி கடற்கரை சாலையில் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல் நடைப் பயிற்சி மேற்கொள்வதால் கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால், அடுத்த பத்து நாட்களுக்கு கடற்கரை சாலை மூடப்படும் என்றும், வரவிருக்கும் 10 நாட்களுக்கு கடற்கரை சாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை என்றும் முதலமைச்சர் நாராயணசாமி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இவை அனைத்தும் இன்று (23-06-2020) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதையும் படிங்க : புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தீ: 2 பூக்கடைகள் எரிந்து நாசம்