புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது அம்மாநில மாணவர் கூட்டமைப்பினர் பெரியகடை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், "கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் துணைநிலை ஆளுநரோ (பிரதிவாதி) மற்ற அரசு அலுவலர்களோ பொதுமக்களிடம் குறைகேட்கிறோம் என்று சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்டோ அல்லது தங்களது சொந்த வலைதளங்களை பயன்படுத்துவது தவறு என்றும், இதற்கென்று உள்ள அரசு வலைதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால் மாநில துணைநிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடி உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தனது சொந்த வலைதளத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். மக்களாட்சியின் மகத்துவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்படும் ஆளுநர் கிரண்பேடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.