ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க 2018 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் பேரறிவாளன் சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளனின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க 2018 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இந்தப் பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், பேரறிவாளனின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் சட்டப்படியான முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும் என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்குப் பதிலுரைத்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், 'இந்த வழக்குத் தொடர்பாக சிபிஐ சார்பில் பல்நோக்கு ஆணையம் அமைக்கப்பட்டு,அதனுடைய அறிக்கைக்காக சிபிஐ காத்திருக்கிறது. சிபிஐ-யின் அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டால், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்' எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இவ்வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.