பொது சுகாதார அவசர தேவைகளில் சமூக ஒன்றிணைதலின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், அரசாங்கமும் சுகாதார அமைப்புகளும் பொதுமக்களோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இபோலா வைரஸ் மற்றும் நிஃபா வைரஸ் தொற்றை சமாளிக்க சமூக ஒன்றிணைதல் மிகவும் உதவியது.
2018ஆம் ஆண்டு ஆப்ரிக்காவின் வடகிழக்கு டிஆர் காங்கோ பகுதியில் பரவத் தொடங்கிய இபோலா காரணமாக, 2019 ஜூலை சர்வதேச பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதேபோல் 2018ஆம் ஆண்டு கேரளாவில் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு பரவத் தொடங்கிய நிபா வைரசை உலக சுகாதார மையம் பொது சுகாதாரத்தை அச்சுறுத்தும் நோயாக அறிவித்தது.
சமூக ஒன்றிணைதல் என்றால் என்ன?
சமூக ஒன்றிணைதல் என்றால் சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து சுகாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாய் இருப்பது என உலக சுகாதார மையம் விளக்கமளித்துள்ளது.
மக்களின் சமூக, சுற்றுச்சூழல் அமைப்பை வைத்தே சுகாதாரம் மற்றும் நோயின் உருவாக்கம் அமைகிறது என்பதே சமூக ஒன்றிணைதலின் கொள்கை. அணிதிரட்டல், தகவல் அளித்தல், சுகாதாரக் கல்வியின் வாயிலாக சுகாதாரம் பற்றி பரப்புரை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை இதன் உத்திகள் ஆகும்.
மக்களுக்கு இது எப்படி உதவும்?
அணிதிரட்டல்: மாநில அளவில் நிதி திரட்டல், தனியார் நிறுவனங்கள் மருத்துவ உதவி வழங்குதல் உள்ளிட்டவை இதன்மூலம் சாத்தியம். இந்த சூழலில் சமூக தலைவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அணிதிரண்டு செயல்பட வேண்டும். நோய் குறித்து அனைவரிடமும் தெளிவான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
இதில் கேரள மாநிலம் வழிகாட்டியாய் திகழ்கிறது. நிஃபா வைரசை அம்மாநில மக்கள் விரட்டியடிக்கக் காரணம் சமூக ஒன்றிணைதல்தான். அரசுசாரா அமைப்பினர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசாங்கத்தின் முயற்சிக்கு உறுதுணையாய் நின்றனர். இதனால்தான் அவர்கள் கோவிட் 19 தொற்றை தைரியத்துடன் எதிர்கொள்கின்றனர். கரோனா பரவலை தடுக்க பல மாநிங்களும் கேரளாவை பின்பற்றத் தொடங்கியுள்ளன.
தகவல் அளித்தல்: கரோனா பரவல் மற்றும் சிக்கல்கள் குறித்த பயனுள்ள தகவல்கள் நன்மைபயக்கும். இது பாதிக்கப்பட்ட நபர்கள் மீண்டு வர உத்வேகம் தருவதாய் அமையும். உடனடியாக தகவல்களை அளிப்பது சூழலுக்கு ஏற்ப செயல்பட உதவியாய் இருக்கும்.
சரியான தகவல்களை மக்களுக்கு விரைவாக அளிக்க ஊடகங்கள், சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். நிஃபா தொற்றின்போது கேரளா இதைத்தான் செய்தது. அதேபோல் வதந்திகளை தடுப்பதற்கான நடவடிக்கையும் கடுமையாக இருக்க வேண்டும்.
சுகாதாரக் கல்வியின் வாயிலாக சுகாதார பரப்புரை: சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் கொள்கையின் அடிப்படையில் சுகாதார பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் மக்கள் தங்கள் சுகாதார முன்னேற்றத்தில் உறுதியான முடிவை எடுப்பார்கள்.
சமூக ஒன்றிணைதலின் நன்மைகள்
சமூக ஒன்றிணைதல் பொது சுகாதார முன்னேற்றத்தில் அதி முக்கிய பங்களிப்பு வகிக்கிறது. சுகாதார அவசர நிலையின்போது சமூகங்கள் ஒன்றிணைவது நீண்டகாலமாக பலனளித்து வருகிறது.
வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் இது நமக்கு நம்பிக்கையை அளிக்கும்.
பொது சுகாதார அமைப்புகள் மீது இந்தச் சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையை இது அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை இது நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
தவறான தகவல்களால் ஏற்படும் அச்சத்தையும் தயக்கத்தையும் இது போக்குகிறது.
சமூக இணக்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த இது உதவுகிறது.
எழுதியவர்: நந்தா கிஷோர் கன்னூரி - இந்திய பொது சுகாதாரக் கழகம்