மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், புதுச்சேரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மத்திய அரசின் புதிய பட்ஜெட் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள் கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள், வரி விடுப்புகள், தள்ளுபடிகள் என வாரி வழங்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கடன் ரத்தாகும் உத்தரவாதம் இல்லை.
விவசாய நிலங்களை எவ்வித இழப்பீடுமின்றி மெட்ரோ ரயில்வே வணிக நடவடிக்கைகளுக்காக பறிப்பதற்காக நில ஆர்ஜித சட்டம் திருத்தப்பட்டது. மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பாக பெருமுதலாளிகளிடம் கோடிக்கணக்கான ரூபாயை நிதியாக பெற்ற பாஜக அரசு அதற்கு கைமாறாக இந்த நிதிநிலை அறிக்கையை தயார் செய்துள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.