எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் தன்னிறைவு அடைவது குறித்து உலகெங்கிலும் உள்ள இந்தியா மாணவர்களுடன் காணொலி காட்சி வழியே மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாடினார்.
அப்போது பேசிய அவர், "உலக அளவில் முக்கிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப வேண்டும். இங்கு அவர்கள் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் செய்யப்படும் எரிபொருள் இறக்குமதியை 2022ஆம் ஆண்டுக்குள் 10 விழுக்காடு வரை குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்காக, உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க அரசு கொள்கை ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவின் எரிசக்தி தொடர்பாக தெளிவான வரைபடத்தை பிரதமர் கண்டறிந்துள்ளார். இதில் அனைவருக்கும் தேவையான எரிசக்தி அணுகக்கூடிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வது, பரம ஏழைகளுக்கும் மிகக் குறைந்த விலையில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வது, எரிசக்தி பயன்பாட்டில் செயல்திறன், காலநிலை மாற்றத்தை சமாளிக்க பசுமையான முறையில் எரிபொருள்களை உருவாக்குவது, எரிசக்தி பாதுகாப்பு குறித்து உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைத் தணித்தல் என ஐந்து முக்கிய காரணிகள் உள்ளன.
உலக எரிசக்தி சந்தையில் இந்தியா தனது இருப்பை உணர்த்தியுள்ளது. ஒபெக், ஐ.இ.ஏ, ஐ.இ.எஃப் மற்றும் பிற முக்கிய கூட்டமைப்புகளுடன் நாமும் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகிறோம். பல நாடுகளிடமிருந்து எரிபொருளை கொள்முதல் செய்ய ஏதுவாக அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்களுடனும் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது" என்றார்.
மேலும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு பெரும் சாவல்களை கொடுத்துள்ள கரோனா தொற்றிடம் நாடு சிக்கியுள்ளது என்றார். இதன் காரணமாக இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி பாதிப்படைகிறது என்றாலும் இது நம்மை மறுபரிசீலனை செய்து மறுவடிவமைப்பு செய்ய நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடி தலைமையில் கேரளாவில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் - ஜே.பி.நட்டா