உன்னாவ் பகுதியில் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் செல்லும் வழியில், உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். தேசத்தை உலுக்கிய இந்தச் சம்பவம் ஏற்படுத்திய ரணம் ஓய்வதற்குள், அதே உன்னாவ் பகுதியில் நடந்துள்ள மற்றொரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றவர்கள் மீது, தான் அளித்த புகாரைக் காவலர்கள் பெற மறுத்துவிட்டதாக குற்றம்சாடியுள்ளார். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், " சில மாதங்களுக்கு முன் நான் மருந்து வாங்க சென்றபோது, என்னை வழிமறித்த மூன்று பேர், என் உடைகளை களைய முயன்றனர். மேலும், என்னை பாலியல் வன்புணர்வு செய்யவும் முயன்றனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பின் நான் 1090 என்ற எண்ணில் (பெண்களுக்கான உதவி எண்) அழைத்தேன். அவர்கள் என்னை 100க்கு அழைக்கச் சொன்னார்கள். அருகிலிருக்கும் உன்னாவ் காவல் நிலையத்தில் புகாரை அளிக்கும்படியும் கூறினர்" என்றார்.
அதன்படி புகார் அளிக்க தான் காவல் நிலையம் சென்ற போது, 'பாலியல் வன்புணர்வு நடந்த பின் வா, அப்போது புகாரைப் பெற்றுக்கொள்கிறோம்' என்று காவலர்கள் என்னை அங்கிருந்து அடித்து விரட்டினர். மேலும், பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றவர்கள் தினமும் அப்பெண்ணின் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அப்பெண்மணி வேதனைப்பட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புகார் கொடுக்க மூன்று மாதங்களாக முயல்வதாகவும்; ஆனால் யாரும் தனது புகாரைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அப்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உன்னாவில் 3 வயது குழந்தைக்கு வன்கொடுமை - கயவனைக் கைது செய்த காவலர்கள்!