புதுச்சேரி மாநிலத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்களை உடனடியாகப் பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் ஏரளமான மாணவர்கள் காரைக்கால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கரோனா அச்சம் நீடித்து வரும் சூழலில், இது வைரஸ் பரவலுக்கு வழி வகுக்கும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, 'தற்சமயம் புதுச்சேரியில் உயர் கல்விக்கான சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்கள் மாணவர்களின் அவசிய தேவையாக உள்ளது.
மேலும் மாணவர்களிடம் ஏற்கனவே உள்ள பழைய சாதி சான்றிதழும், இருப்பிட சான்றும் மாணவர் சேர்க்கைக்கு செல்லத்தக்கது ஆகும். அதனால் மாணவர்கள் புதிதாக சாதி மற்றும் இருப்பிட சான்றுகளுக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. மாணவர் சேர்க்கைக்குப் பின்னர் ஒரு மாத காலத்தில் புதிய சான்றிதழ்களை பெற்று சமர்ப்பித்தால் போதுமானது.
மேலும் மாணவர் சேர்க்கையில் பிராந்திய அடிப்படையிலான இட ஒதுக்கீடு பெறுவதற்குரிய சான்றிதழ்களை அளிப்பதில் காலதாமதம் செய்யப்படுவதாக சில புகார்கள் வந்தன.
இது தொடர்பாக வட்டாட்சியர்கள், மேல் நிலைக் கல்வி துணை இயக்குநர் உள்ளிட்டோருக்கு தாமதமின்றி ஒரே நாளில் சான்றிதழ்களை வழங்க உரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.