இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-ஈ-தொய்பா அமைப்பினால் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு மும்பையில் தாக்குதல் நடத்த 10 பயங்கரவாதிகள் அனுப்ப பட்டனர். பாகிஸ்தானின் கடலோர நகரமான கராச்சியிலிருந்து அதிவேக படகு மூலம் மும்பைக்கு வந்த பயங்கரவாதிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தாக்குதலை நடத்த தொடங்கினர்.
மூன்று நாட்களாக நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் மும்பையின் முக்கிய இடங்களான தாஜ் ஓட்டல், நரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் என பல இடங்களில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 166 பேர் உயிரிழந்தனர்.
இதில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அஜ்மல் கசாப், இஸ்மாயில் கான் என்ற இரண்டு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் பயங்கரவாதி அஜ்மல் கசாப், சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் தாக்குதல் நடத்துவதற்கு தற்போது இடிந்து விபத்துக்குள்ளாகி 6 பேரை பலி கொண்ட நடைமேம்பாலத்தைதான் பயன்படுத்தியுள்ளான். கையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் நடைமேம்பாலத்தின் வழியாக ரயில் நிலையத்தில் புகுந்த கசாப், கண்மூடித்தனமான தாக்குதலை அப்பாவி மக்கள் மீது தொடுத்துள்ளான்.
மும்பை மக்களின் மனதில் ஆறாத வடுவாய் பதிந்துள்ள இச்சம்பவத்திலிருந்து, சத்ரபதி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள நடைமேம்பாலத்தை பொதுமக்கள் 'கசாப் பாலம்' என்றுதான் அழைக்கின்றனர்.
1984 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த நடைமேம்பாலம், சென்ற வருடம்பெய்த பலத்த மழையினால் சேதமுற்றது.
இதனிடையே 9 மாதங்களுக்கு முன்பாக மும்பையின் எல்பின்ஸ்டோன் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.