வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கொக்கேன் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அரசு மருத்துவமை ஒன்றில் அவர் மீது எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனையில், அந்த நபரின் வயிற்றில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சை மூலம் அவரது வயிற்றிலிருந்த கொக்கைன்கள் அடங்கிய ட்யூப் உருண்டை வடிவிலான 65 மாத்திரைகளை கைப்பற்றினர்.
முதற்கட்ட விசாரணையில், கடத்தல்காரர் எத்தியோப்பியா தலைநகர் அதிஸ் அபாபா வழியாக இந்தியா வந்தது தெரியவந்தது.
இந்தக் கடத்தலுக்கு காரணமான உள்ளூர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.