இந்தியாவில் அடுத்து 5 முதல் 7 ஆண்டு காலத்திற்கு டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் நோக்கில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இத்திட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு அம்மாநில முதலமைச்சர் திருவேந்திர சிங் ராவத் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் சிறு நகரங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வதற்கு ஒரு பெரிய வாய்ப்பு இருப்பதாக அவர் இக்கடிதத்தில் குறிப்பிட்டார். இந்த முயற்சியில் உத்தரகாண்ட் அரசு முழு ஒத்துழைப்பும் தரும் என உறுதியளித்தார்.
கரோனா வைரஸ் பெருந்தொற்றால் மாற்று வழியில் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்ற வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்குமாறு தலைமைச் செயலர் உத்பால் குமார் சிங், கூடுதல் தலைமைச் செயலர் மனிஷா பன்வார் ஆகியோரை ராவத் கேட்டுக் கொண்டார்.