கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்தியால்பேட்டை, திருக்கனூர் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இன்று முதல் விடுவிக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்தவர்களால் தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது.
புதுச்சேரியிலும் கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள் 160 பேர் கண்டறியப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மக்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கடையில் வேலை செய்பவர்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று முதல் தளர்வு விதிக்கப்பட்டதிலிருந்து மக்கள் சமூக விலகலை மதிக்காமல், நகரில் கூட்டம் கூட்டமாக சென்றது வேதனைக்குரியதாக உள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வணிகர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியுள்ளனர். கடைகளின் நேரத்தை மாற்றி அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஓரிரு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் நடமாட்டத்தைக் கவனித்த பின்,கொடுத்துள்ள தளர்வுகளில் எவற்றிற்கு மீண்டும் தடைவிதிப்பது என்பதை அரசு முடிவு எடுக்கும். கடலூர் , திண்டிவனம், விழுப்புரம் எல்லைப் பகுதிகளில் அதிகளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. யாரும் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: 'மதுவாங்க குடை வேண்டும்...' - தகுந்த இடைவெளியில் ஆந்திரா!