மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தத் துறையானது அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் ஒன்பது துறைகளில் ஆய்வு செய்தது. ஆய்வு முடிவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் யூனியன் பிரதேச மாநிலங்களிலேயே புதுச்சேரி, சிறந்த நிர்வாகம் செய்யும் மாநிலமாக முதலிடத்தைப் பெற்றது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, மருத்துவம், மனிதவள மேம்பாடு, சட்டம்-ஒழுங்கு, நீதி நிர்வாகம் என நான்கு துறைகளில் புதுச்சேரி சிறந்து விளங்குவதாகவும் விவசாயத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இது அரசு அலுவலர்கள், மக்கள் என அனைவரின் ஒத்துழைப்பால் கிடைத்தது எனவும் நாராயணசாமி தெரிவித்தார். மூன்று ஆண்டுகளாகப் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது எனக் கூறிய நாராயணசாமி, மத்திய அரசின் நிதி உதவி புதுச்சேரிக்கு கிடைக்காததால் மாநில வருமானத்தை வைத்து வளர்ச்சியை தேடவேண்டியுள்ளது என்றார்.
மேலும் மத்திய அரசிடமிருந்து முறையான எந்த நிதியும் கிடைக்கவில்லை என்று சாடிய அவர், மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு கொடுக்கப்படும் அரசியல் தொல்லைகள் நீங்கினால் புதுச்சேரியின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடனுக்குடன்: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்