புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் உள்ள அவரது அறையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் எரிவாயு கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி செய்கின்றது.
புதுச்சேரி பாகூர், காரைக்கால் பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாகச் செய்துவருகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படும். மேலும், இதில், ரசாயனக் கலவை அதிகமாகப் பயன்படுத்தப்படும். இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு நீரின் மட்டமும் குறைய வாய்ப்புள்ளது.
மாநில அரசின் அனுமதி தேவையில்லை. நேரடியாக வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் புதுச்சேரியில் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். மத்திய அரசு சர்வாதிகாரப்போக்கை கடைப்பிடிக்கிறது.
வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இந்தத் திட்டத்தை தடுத்துநிறுத்துவோம். இதற்காக எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராகவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: பெரியார் குறித்து அவதூறு பேச்சு - ரஜினி வீடு முற்றுகை