சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (SICCI) ஏற்பாடு 'SICCI 360' என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சௌமியா சுவாமிநாதன், “இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், தொற்று சமூக பரவலாக மாறுவதற்கு முன்பு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆவண செய்யவேண்டும்.
கரோனா பரவலைத் தடுத்து வெற்றிகண்ட நாடுகளைப் காணும்போது, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாம் முன்னோக்கி செல்லவேண்டும். இது சமூகப் பரவலைத் தடுப்பதற்கு சிறந்த வழியும் கூட.
தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறது. தமிழ்நாட்டில் 15 விழுக்காடாக இருந்த தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது ஐந்து விழுக்காடாக குறைந்துள்ளது. இருப்பினும், நாம் தொற்றைக் கையாள்வதில் முன்னேறிச் செல்லவேண்டும்.
கரோனா ஹாட்ஸ்பாட்களாக மாறக்கூடிய பகுதிகளை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். சென்னையில் கோயம்பேடு போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எடுத்த நடவடிக்கை போல, வேறு சில மக்கள் கூடும் இடங்கள், மதக் கூட்டங்கள் உள்ளன. அவற்றை அடையாளம் காணவேண்டும்.
அதுமட்டுமின்றி, தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள இடங்களையும் கண்டறிந்து, அங்கு பாதுகாப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகரிக்கவேண்டும்” என்றார்.