சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் மறுதேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ கால அட்டவணையை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் மறுதேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விவேக் டங்கா, "2 லட்சம் மாணவர்களின் மேற்கல்வியை தேர்வு செய்வதிலும், தொடர்வதிலும் பெரும் தற்போது இடையூறு ஏற்படும்" என வாதிட்டார்.
பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (யுஜிசி) ஆலோசகர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், " இந்த கல்வியாண்டில் அட்டவணையின் படி அக்டோபர் 31 ஆம் தேதிவரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர்களின் உயர்கல்வி தொடர்வதில் ஆபத்து ஏற்படாதவாறு இருக்க கல்லூரி சேர்க்கை காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.
இதன்போது சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த மறுதேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, மறுதேர்வு முடிவுகள் அக்டோபர் 10ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அறிவிக்கப்படும்" என பதிலளித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், " ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நினைவில் வைத்து சிபிஎஸ்இ மற்றும் யுஜிசி இணைந்து இந்த விவகாரத்தில் ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டியது அவசியம்.
கல்லூரி சேர்க்கைக்கான வாய்ப்பை மறுதேர்வு எழுதும் மாணவர்கள் இழக்கக்கூடாது. நடப்பு கல்வி ஆண்டு ஒரு விசித்திரமான சூழ்நிலையை கொண்டிருக்கிறது என்பதால், நீங்கள் ஒருங்கிணைக்க பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சம் மாணவர்கள் என்பது ஒரு சிறிய எண் அல்ல" என அறிவுறுத்தியது.