உச்ச நீதிமன்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஆர். பானுமதி "நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் நீதி நிர்வாகம்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே டெல்லியில் இன்று (செப்டம்பர் 12) வெளியிட்டார்.
அப்போது நீதிபதி எஸ்.ஏ.போப்டே பேசுகையில், "பல்வேறு நீதிமன்றங்களில் எனது மாறுபட்ட அனுபவத்தின் காரணமாக ஒவ்வொரு கட்டத்திலும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். நீதிபதிகளை விமர்சிக்க சட்டத்தைப் பயன்படுத்தும் மற்றவர்களின் சுதந்திரத்தை நிலைநிறுத்த அதே சட்டங்களால் நீதிபதிகளின் பேச்சு சுதந்திரம் குறைக்கப்படுகிறது.
வழக்குகள் குறித்து மதிய உணவின் போது கூட நீதிபதி பானுமதி எப்போதுமே எண்ணிக் கொண்டிருப்பார். மற்ற நீதிபதிகள் தங்கள் மனதை விட்டு வெளியேற வேறு தலைப்பில் பேசுவர். நீதிபதி பானுமதி நீதிமன்றங்களின் சாதனைகள் குறித்தும் எழுதியுள்ளார்" என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி டி.ஒய் சந்திரசூட், "நீதிபதிக்கான பல்வேறு அத்தியாவசிய அம்சங்களை புத்தகத்தில் எடுத்துரைத்துள்ளார். ஒரு நீதிபதி 365 நாட்கள் மற்றும் அவர்களின் பதவிக் காலத்தில் 24/7 வரை நீதிபதியாக இருக்கிறார்" என்று கூறினார்.