மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தை முன்வைத்து பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்தார். இதற்கு எதிராக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரதீப் மோடி என்பவர் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விபூல் குமார், ராகுல் காந்தி தரப்பு நியாயத்தை ஜூலை 3ஆம் தேதி ஆஜராகி விளக்க வேண்டும் எனக் கூறி ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
முன்னதாக மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் எனக் கூறியதாக ராகுல் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் சொல்லாத கருத்தை ராகுல் தெரிவிக்கிறார் எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பாஜக மக்களவை உறுப்பினர் மீனாட்சி லேகி தொடர்ந்தார். இதில் தான் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்வதாக ராகுல் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.