கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது, ஓடுதளத்தில் வழுக்கியதன் காரணமாக விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த விபத்து அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மங்களூரு விமான நிலைய விபத்து போல் அல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக உயிரிழப்பு அதிருஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
இடைக்கால உதவித் தொகையாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதுதொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள், நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்படும்.
மிகவும் அனுபவம் வாய்ந்த இந்திய விமானப் படையின் முன்னாள் விங் கமாண்டர் தீபக் சதேதான் இந்த விமானத்தை இயக்கியுள்ளார். அவர் இதுவரை விபத்து நடந்த விமான நிலையத்திற்கு 27 முறை விமானத்தை இயக்கிவந்துள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: கோழிக்கோடு விமான விபத்து : விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு