பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார்.
இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உத்தரப் பிரதேச காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், சின்மயானந்தா கைது செய்யப்பட்ட நிலையில் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை காரணம் காட்டி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திடீர் திருப்பமாக பணம் பறிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவி தன்னை பாலியல் வழக்கில் சிக்க வைத்ததாக சின்மயானந்தா வழக்குத் தொடர்ந்தார். பணம் பறிப்பு வழக்கில் தன்னை கைது செய்வதிலிருந்து தடைவிதிக்கக் கோரி, சட்டக்கல்லூரி மாணவி அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பின்னர், சட்டக்கல்லூரி மாணவியை காவல் துறையினர் கைது செய்து 14 நாள்கள் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் கைப்பையையும் சில புத்தகங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு சின்மயானந்தா ஆசிரமத்திற்கு அருகே உள்ள வாய்க்காலிருந்து எடுத்தனர்.
இந்நிலையில், பாஜக மூத்தத் தலைவர் ரதோரை 12 மணி நேரமாக விசாரித்தபோது, சின்மயானந்தாவுக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கும் மடிக்கணினியையும் பென்டிரைவையும் அவர் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளித்தார். இதனால் சின்மயானந்தா விரைவில் கைது ஆவார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: