ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பகத்துக்கு, லே தலைமை நிர்வாக அலுவலர் கொன்சோக் ஸ்டான்ஸின் பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய நிலப்பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவம் அங்கிருந்து பின்வாங்கவில்லை. மேலும், லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே எல்லையை நிர்ணயிக்கும் எல்லைகோடும் இல்லை. இந்தப் பகுதி நெருக்கமாக மக்கள் வசிக்கும் பகுதி.
இதனை ஆக்கிரமிக்க சீனா முயல்வதால், அப்பகுதி மக்கள் விளைச்சல் நிலங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த சச்சரவை பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்க்க முடியும்.
இந்தப் பகுதியில் மோதல் மே மாதத்தில் தொடங்கியது. அதன் பின்னர் பெய்ஜிங் மற்றும் டெல்லி ஆகிய இரண்டும் பங்காக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் பாங்காங் த்சோ மற்றும் கால்வன் பள்ளத்தாக்குகளுக்கு அருகே படைகளை நிறுத்தியது. இரு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு இருப்பை அதிகரித்துவருகின்றன.
இந்தப் பகுதிகளில் பஷ்மினா ஆடுகள் வளர்க்கும் நாடோடி இன மக்கள் அதிகளவு வசிக்கின்றனர். இவர்களின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகள் நடைபெறவில்லை. மேய்ச்சல் நிலங்களை அணுகுவது குறித்தும் அவர்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.
குளிர்காலத்தில் அவர்கள் கால்நடைகளை மேய்ச்சல் நிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இந்தப் பிரச்னை பதினைந்து நாள்களுக்கு மேலாக ஆபத்தான விவகாரமாக மாறியுள்ளது. ஆகையால் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கடந்த காலங்களில் ராணுவ ரோந்து சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும். ஆனால் தற்போது இதுவே ஒரு பிரச்னையாகியுள்ளது. கடந்த மாதம் நீண்ட கால ரோந்துப் பணிகள் நடந்தது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையை தெளிவாக வரையறுக்க வேண்டியது அவசியம். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தெளிவான எல்லை நிர்ணயம் செய்யப்படாவிட்டால் மோதலை ஒருபோதும் தீர்க்க முடியாது.
மேலும், சீன இராணுவம் மேய்ச்சல் நிலங்களில் நாடோடிகளாக மாறுவேடமிட்டு பிரதேசத்தை உரிமை கோருகிறது. இந்தியாவும் தனது நாடோடிகளை மேய்ச்சல் பகுதிகளுக்கு சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும்.
இந்தியா- சீனா மோதல் குளிர்காலத்துக்குள் தீர்க்கப்படாவிட்டால், அது லடாக்கின் எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு கொன்சோக் ஸ்டான்ஸின் கூறினார்.