உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் சீனா:
இதுவரை இல்லாத அளவு, கடுமையான எதிர்மறை விமர்சனங்களை பல்வேறு தளங்களில் தற்போது எதிர்கொண்டு உலக அரங்கில் சீனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியொரு ஆளாக எட்டுத்திக்கும் கம்பு சுற்றி வருகிறது.
ஹாங்காங், திபெத், ஸின்ஞ்சியாங் ஆகிய பகுதிகளில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், தென்சீனக் கடலில் வல்லாதிக்க விரிவாக்க செயல்பாடுகள், வளர்ந்த நாடுகளுடன் வர்த்தக முரண்பாடுகள், கரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்களை தவறாக கையாண்டது, பெரிதாகப் பேசப்பட்ட உலகை ஒன்றிணைக்கும் ’ஒரே மண்டலம், ஒரே சாலை’ (BRI) திட்டம், இந்திய எல்லைக்குள் ஊடுருவல், நேபாளத்தின் உள்நாட்டு அரசியலில் தலையீடு என்பவற்றோடு சேர்ந்து ’கந்துவட்டி - கடன்வலை ராஜதந்திரம்’, சீனாவை பெருவாரியான நாடுகளிடம் இருந்து அந்நியப்படுத்தி தனிமைப்படுத்தியுள்ளது.
கந்துவட்டி கடன்வலை:
இந்த கந்துவட்டி கடன்வலை ராஜதந்திரம் என்னும் சொற்றொடரை உருவாக்கியது புது டெல்லியைச் சேர்ந்த புவி அரசியல் வல்லுநரும் எழுத்தாளருமான பிரம்ம செலானி ஆவார். ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள, சீனா கையாண்டுவரும் நிதியுதவிக் கொள்கைகளைக் குறித்திட 2010ஆம் ஆண்டு வாக்கிலேயே இந்தப் பதத்தை அவர் பயன்படுதலானார்.
ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி இன்று உலகளாவிய அளவில் சீனா இத்தகைய கடனுதவி அளித்துவருகிறது. எத்தகைய கடனுதவி என்றால், வழங்கப்படும் பாணியும் நிபந்தனைகளும் கடன்பெறும் தேசங்களில், சீனா வலுவாகக் காலூன்றி அந்த நாடுகளின் வளங்களை வளைத்துப்போட வழிவகுக்கிறது. மேலும், தனது நலனைப் பாதுகாக்க அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது.
அதிக வட்டி, ஆட்சியாளர்களுக்கும் வலை:
ஆச்சரியம்தான் ஆனால் இது எப்படி சாத்தியமென்ற கேள்வி எழுகிறது. குறைவான வருவாய் உள்ள வளரும் நாடுகளையே சீனா குறிவைக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக பன்னாட்டு நிதி நிறுவனங்களான பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை கடனுதவி அளிப்பதில் கறாரான நடைமுறைகள் உண்டு.
திட்டங்களைக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்க வேண்டும், வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பவற்றோடு கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி அவசியம். இத்தகைய நடைமுறைகள், நிபந்தனைகள் காரணமாக கடன் பெற இயலாத நாடுகள், அந்நிய நிறுவனங்களிடம் கடன் வேண்டி சரனடைகின்றன.
பண பலம் மிக்க சீன நிறுவனங்கள், தாங்கள் உள்ளே நுழைய இந்த சூழலைப் திறம்படப் பயன்படுத்துகின்றன. உற்பத்தித் துறையிலும் ஏற்றுமதியிலும் உலக அளவில் கோலோச்சுவதால், சீன பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து நிதி ஆதாரம் பெருகியுள்ளது.
எனவே, சீன அரசும், வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் அயல் நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்த முனையும் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிக்க முன்வருகின்றன. அதுவும் அதிக வட்டிக்கு!
உலக வங்கியோ, பன்னாட்டு நிதியமோ முன்வராத நிலையில் சீன அரசும் சீன நிறுவனங்களும் காட்டும் ஆர்வம் சாதாரனமானதல்ல. சோழியன் குடுமி சும்ம ஆடுமா? சர்வதேச நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் 3-4% என்ற அளவில் உள்ளபோது, சீன அரசோ சீன நிறுவனங்களோ கடனுதவி தருவது 6% வட்டிக்கு! சற்றேரக்குறைய இருமடங்கு வட்டி!
ஒரு நாடு கடன் வாங்கிய பின்னர்தான் சீனாவின் ஆட்டம் ஆரம்பமாகிறது. கடனுதவி அளிக்கும் சீன வங்கியோ, தனியார் நிதி நிறுவனமோ, கடனுக்குப் பிணையாகப் பெறுவது எவற்றை தெரியுமா? நிலம், சுரங்கம் வெட்டுவதில் சலுகை மற்றும் முன்னுரிமை, எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் குத்தகை அல்லது வர்த்தகத்தில் முன்னுரிமை. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம், ஆனால் நடைமுறை ஒன்றுதான்.
கடனுதவியைக் கொண்டுவரும் சீன நிறுவனம் திட்டத்திற்கு அதிகப்படியான மதிபீட்டை முன்வைக்கும். இருப்பினும், அதற்கே டெண்டர் கிடைக்கும். திட்டத்திற்கான நிதி ஆதராத்தைக் கொண்டுவருவதாலும், ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தருவதாலும் சீன நிறுவனங்களின் கையை விட்டு திட்டம் எங்கும் போகாது. இவ்வறு வெளிப்படைத் தன்மையயற்ற, நேர்மையற்ற வணிக நடைமுறைகளை சீன நிறுவனங்கள் கையாளுகின்றன.
எல்லாம் சீனமயம்:
கடனுதவிக்கான பிற நிபந்தனைகள் இன்னும் மோசமானவை. அவற்றுள் முக்கியமானவை: சீன நிறுவனங்களே ஒப்பந்ததாரர்களாக இருத்தல் வேண்டும், சீன கருவிகள் மற்றும் இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும், திட்ட மேலான்மைக்கு சீன நிறுவனங்களையே அமர்த்த வேண்டும், மேலும் பெரும்பாலான பணிகளில் சீன தொழிலாளர்களையே பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறாக, திட்ட மதிப்பீடே அதிகம் என்னும் நிலையில், செலவினங்களில் பெரும் பகுதி ஒப்பந்ததாரருக்கே சென்றுவிடுகிறது. இதற்கடுத்து, கடன் பெற்ற நாடு, கடனையோ, தவனையையோ உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த காலதாமதம் ஆகும்பட்சத்தில், பிணையாகக் காட்டப்பட்டவை கையகப்படுத்தப்படும்.
இந்த நடைமுறை, இந்திய கிராமங்களில் நிலவும் கந்துவட்டி முறைக்கு நிகரானது என்றால் மிகையில்லை. ஆனாலும், சில அரசியல் பார்வையாளர்கள் சீனா இத்தகைய முறையற்ற சந்தேகத்துக்குரிய வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை என சீனாவுக்கு ஆதரவாக வாதிடுகிறார்கள்.
இருந்தபோதிலும், சீனாவின் செயல்பாடுகள் அதன் உள்நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. வெளிப்படைத்தன்மையற்ற ஓளிவு மறைவான ஒப்பந்தங்கள், அடிக்கடி திட்ட மதிப்பீட்டை உயர்த்தி செலவினத்தைக் கூட்டுவது, இடையில் ஒப்பந்தக்காரர்கள் திட்டத்தையே அம்போவெனக் கைவிடுவது மற்றும் பிணைய சொத்துக்களைக் கையகப்படுத்துவது என்பன எல்லாம், சீனாவின் உண்மையான நோக்கத்தினை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
ஆக்டோபஸ் கடன் வலையில் உலக நாடுகள்:
சீனாவின் கடன் வலையில் எத்தனை உலக நாடுகள் சிக்கித் திணருகின்றன என்று எண்ணிப்பார்த்தால் அச்சமும் ஆச்சரியமும்தான் வருகிறது. அமெரிக்காவின் ஹோவர்ட் பல்கலைகழக ஆய்வின்படி, 152 நாடுகளுக்கு 1.5 ட்ரில்லியன் டாலர் கடன்வழங்கியுள்ளது சீனா. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதி ஆகும்.
மேலும், வளர்ந்த நாடுகளின் கடன் பத்திரங்களை வாங்கிக் குவித்திருப்பது மற்றும் பல்வேறு நாடுகளுடன் உள்ள வர்த்தக வரவு ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இது ஐந்து ட்ரில்லியன் டாலர் என உலக பொருளாதாரத்திற்கான கியேல் நிறுவனம் தெரிவிக்கிறது. அதிர்ச்சி அடைய வேண்டாம், உலக பொருளாதாரத்தில் இது 6% என்பது குறிப்பிடத்தக்கது!
இந்தக் கடனெல்லாம், சீனாவின் இலட்சியத் திட்டமான, ‘ஒரே மண்டலம், ஒரே சாலை’ திட்டத்தின் பகுதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சீனாவின் கடன் வலை என்னும் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கியுள்ளன. குறிப்பாக, 12 நாடுகள் சீனாவிடம் பெற்றுள்ள கடன் அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20% க்கும் அதிகம் என்பது இந்த சிக்கலின் தீவிரத்தை உணர்த்தும்.
அந்த 12 நாடுகளும் இவைதான்: ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபூத்தி, காங்கோ குடியரசு, நைஜர் மற்றும் ஸாம்பியா, மங்கோலியா, கிர்கிஸ்தான், கம்போடியா, லாவோஸ், மாலத்தீவுகள், சமோவா மற்றும் வனுவாட்டு. சீனாவின் நெருக்கடி காரணமாக, செங்கடல் பகுதி நாடான ஜிபூத்தி சீனா ராணுவ தளம் அமைக்க இசைவு தெரிவித்துள்ளது. தனது நாட்டிற்கு வெளியே, சீனா அமைத்துள்ள முதல் ராணுவ தளம் இதுதான்.
விழிபிதுங்கும் இலங்கை; திணரும் அங்கோலா; சிக்கலில் நேபாளம்
சீன கடனை திருப்பிச் செலுத்துவதில் திக்கித் திணறி விழி பிதுங்கி நிற்கிறது இலங்கை. சற்றேரக்குறைய ஒரு பில்லியன் டாலர் சீன கடன் உதவியுடன் கட்டப்பட்ட ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கான கடன் தவனையை செலுத்த இயலாத இலங்கை, அந்த துறைமுகத்தையே சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்குத் தாரைவார்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எண்னெய் வளமிக்க அங்கோலா, தான் பெற்ற 43 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த, வேறு வழியின்றி சீனாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. அங்கோலாவின் தலைநகர் லுவாண்டா அருகே, சீனா ஒரு புதிய நகரத்தையே நிர்மானித்து கட்டியெழுப்பியுள்ளது. ஆனால், அங்கு ஒரு ஈங்குருவி கூட தங்குவதில்லை.
தன்சானியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகியவை கூட கடன் தவனைகளை உரிய காலத்தில் செலுத்த இயலுமா என்ற அச்சம் காரணமாக, தங்கள் நாடுகளில் சீனா மேற்கொண்டுள்ள சில திட்டங்களை பாதியிலேயே கைவிட்டுவிட்டன.
அவ்வாறு மலேசியாவில் கைவிடப்பட்ட திட்டத்தின் கதை சுவராசியமானது. திட்டத்திற்காக பெறப்பட்ட கடனில் 90% செலவான பின்னரும் 15% வெலைகள் கூட நடைபெறவில்லை. வேறு வழியின்றி, முந்தைய மகாத்திர் முகமது அரசு அந்த திட்டத்தையே தூக்கி எறிந்தது.
பாகிஸ்தானில், சீன-பாகிஸ்தான் பொருளாதார பெருவழிச்சாலை (CEPEC)-யை ஒட்டிய திட்டங்களின் ஆரம்ப மதிப்பீடு 36 பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால், 64 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ள திட்ட மதிப்பீடு, 80 பில்லியன் டாலர் என மறுமதிப்பீடு செய்யப்படலாம்.
மேலும், சீன நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெற வேண்டி, பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு 2.5 பில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நமது மற்றுமொரு அண்டை நாடான நேபாளம், கடனுதவிக்காக சீனா மீது கொண்டிருக்கும் மோகத்தை விட்டுவிடவில்லை என்றால் மீளமுடியாத சுமார் எட்டு பில்லியன் டாலர் கடன் வலைக்குள் வீழ்ந்துவிடும் அபாயம் உள்ளது.
நேபாளத்திற்கான சீனாவின் கடன், ஆக்டோபஸ் பிடிதான் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன. இவ்வாறு சீனாவிடம் கடனுதவி பெற்ற நாடுகள், இப்போதுதான் அதன் வலியையும், கடன் வலையின் இருக்கத்தையும் உணர்கின்றன. எதிர் காலத்தில், சீனாவைத் தவிர்த்த பிற வழிகளில் கடன் பெறும் முயற்சியை மேற்கொண்டுள்ளன.
இந்தியா செய்யவேண்டியது என்ன:
சீனாவின் சூழ்ச்சிகரமான வலைப் பின்னலின் பின்னணியில் இந்தியாவின் நிலை எத்தகையது, பாரதம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? பல வளரும் நாடுகளில் இந்தியாவும் காலூன்றியுள்ளது.
மானியம், நிதியுதவி, வர்த்தக சலுகைகள் என நாமும் வழங்கி வருகிறோம். சீனா அளவுக்கு பெரிய அளவில் கடனுதவி அளிக்க முடியாது என்றாலும், சீனாவை விட இந்தியாவுக்கு மிக அதிகமான நற்பெயரும் குறைவற்ற நல்லெண்ணமும் உள்ளது.
கரோனா தக்கத்தினால், சீனாவைப் போலவே இந்தியப் பொருளாதாரமும் பாதிப்புக்கு உள்ளகியுள்ளது என்றாலும், இந்த நெருக்கடியான சூழலையும் நமக்கான நல்வாய்ப்பாக நாம் மாற்ற முடியும்.
உலக அரங்கில் சீனாவுக்கு எதிராக எழுந்துள்ள மன நிலையை, அதிருப்தியை நமக்கு சாதகமாக நாம் சரியாக பயன்படுத்தி, நிதியுதவி தேவைப்படும் நாடுகளுக்கு இயன்ற அளவு சகாயமான கடனுதவி அளிப்பதன் மூலம் நீண்டகால நல்லுறவை வளர்த்தெடுக்கலாம். சர்வதேச சமூகத்தில் நமது இருப்பை இன்னும் வலுப்படுத்தலாம்.
இதையும் படிங்க: சீன அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் உய்கர் மக்கள்