இந்திய-சீன ராணுவங்களுக்கிடையே கடந்த மே மாதம் முதலே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக கல்வான் மோதலுக்குப் பின், உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த சில வாரங்களாக எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் இந்திய-சீன பாதுகாப்புப் படையினருக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த வாரம் ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் நிலவி வரும் தகராறை சுமூகமான முறையில் தீர்க்க ஐந்து அம்சத் திட்டத்திற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில், காஷ்மீர் எல்லையிலுள்ல பிங்கர் 4 என்ற பகுதியில் சீன ராணுவம் ஒலிப்பெருக்கி அமைத்து, பஞ்சாபி பாடல்களை ஒலிக்க விடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீன ராணுவத்தின் இந்தச் செயல்கள் சற்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தை திசை திருப்ப இந்த ஒலிப்பெருக்கிகளை சீன ராணுவம் வைத்துள்ளதா அல்லது உண்மையாகவே எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க இந்த ஒலிப்பெருக்கிகளை வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், எல்லையில் சீன வீரர்களின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கூர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மோடி பிறந்தநாளை வேலை வாய்ப்பின்மை தினமாக அனுசரிக்கும் காங்கிரஸ்!