உலக நாடுகள் அனைத்தும் கரோனா அச்சுறுத்தலால் திணறிவருகின்றன. இந்தியாவில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்தியாவில் செய்யப்படும், பி.சி.ஆர் என்கிற சோதனை முறையில் கரோனா பெருந்தொற்றைக் கண்டறிய, 2 மணி நேரத்திற்கும் மேலாகும். வைரஸ் பரவல் அதிகமாகும்போது, இந்த முறை சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யக்கூடிய அதிவிரைவு பரிசோதனைக் கருவிகளை (ரேபிட் டெஸ்ட் கிட்) வாங்க வேண்டும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, சீனாவில் கரோனா மருத்துவக் கருவிகளை வாங்க இந்தியா முடிவு செய்தது.
கடந்த இரண்டு மாதங்களாக கரோனாவுடன் போராடிய சீனா தற்போதுதான் தன்னுடைய நாடுகளில் தொழிற்சாலைகளின் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. அதில், முக்கியமாக, மருத்துவப் பொருட்கள், வெண்டிலேட்டர்கள், தனிமனிதர் பாதுகாப்பு உபகரணம் (பிபிஈ) உள்ளிட்டவற்றைத் தயாரித்து, ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில், இந்தியாவிற்கு சீனாவின் குவாங்சு மாகாணத்திலிருந்து அனுப்பப்பட்ட 6.50 லட்சம் அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் டெல்லி வந்தடைந்தன.
இதுகுறித்து, இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கூறும்போது, கரோனா பரிசோதனைக்கான கருவிகள் சரியான நேரத்தில் வந்தடையும் வகையில் விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டது. சீனாவில் 15 லட்சம் மருத்துவக் கருவிகளை இந்தியா ஆர்டர் செய்துள்ளது. இன்னும் 15 நாள்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மருத்துவக் கருவிகள், இந்தியா வந்தடையும், என்றார்.
சுங்கத் துறை அனுமதி கிடைத்தவுடன் 6.5 லட்சம் கருவிகள் டெல்லியிலுள்ள தேசிய மலேரியா ஆய்வு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா நிவாரணப் பொருட்களில் என் பெயர் இருக்கணும் - ட்ரம்ப் உத்தரவு