கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய-சீன ராணுவத்திற்கிடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் சிலர் எல்லைப் பகுதிக்கு அருகில் சீனா புதிய சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள சாரங் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழு, சில துணை ராணுவப் படை வீரர்களுடன் அவர்கள் கிராமத்திலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் எல்லை நோக்கி சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள், எல்லையில் உள்ள ஆள் அரவமற்ற பகுதியின் அருகே சுமார் 20 கி,மீ தூரத்திற்கு சீனா புதிய சாலையை அமைத்துள்ளதை கண்டதாக தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சீன பக்கத்தில் கடைசி திபெத்திய கிராமமான டேங்கோவரை மட்டுமே ஒரு சாலை இருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சாலைதான் தற்போது இந்தியாவின் எல்லையை நோக்கி மேலும் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இமாச்சல் மாநிலத்திலுள்ள கின்னூர் மாவட்டம் அருகேவுள்ள சாங்லா பள்ளத்தாக்கு அருகேயும் சீனாவும் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. மேலும், அப்பகுதியில் இரவு நேரங்களில் பல முறை ட்ரோன்கள் காண முடிவதாகவும் இது வழக்கமான ஒன்றாகிவிட்டதாகவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர். இந்திய எல்லையை அடைய இன்னும் இரண்டு கிலோமீட்டர் மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
மறுபுறம் இந்திய பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்றும் எல்லையில் உள்ள பல கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகளும் முறையாக இல்லை என்றும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொதுவாக எல்லை பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உளவுத்துறை அலுவலர்களுக்கு ஆடு மேய்ப்பவர்கள்தான் தகவல் அளிப்பார்கள். சீனாவின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்ந்து உளவுத்துறையினர் அப்பகுதியில் உள்ள நிலையை கூர்ந்து கவனித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'கரோனாவை போலவே சீனா விஷயத்திலும் பேரழிவு நடக்கும்?' - ராகுல் காந்தி