1971 டிசம்பர் 21இல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தூங்கிக் கிடந்த 'இந்திய-பாகிஸ்தான் பிரச்னை'யை கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி சீன மக்கள் குடியரசு ( People's Republic of China) மீண்டும் தட்டியெழுப்பி கவுன்சிலில் ரகசியப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் உலக சமூகத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எனினும், இந்திய-பாகிஸ்தான் பிரச்னையை பொதுவெளியில் விவாதிக்க வேண்டும் என்ற சீனாவின் எண்ணத்தை கவுன்சிலில் உள்ள மற்ற 14 உறுப்பினர்களும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர்.
சீனாவின் இந்தப் புதிய முனைப்பு இரண்டு கேள்விகளை எழுப்புகிறது...
- ஐந்து தசாப்தங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் பிரச்னையை மீட்டெடுப்பதன் மூலம் சீனா சாதிக்க நினைப்பது என்ன?
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் தகுதியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உலக அமைதி, பாதுகாப்பு விவகாரங்களில் சீனா தீவிரமாகத் தலையிட நினைக்கிறதா?
இந்த இரண்டு கேள்விகளுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் பணிகள் குறித்து இந்தியா, 1948 ஜனவரி 1ஆம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் எழுப்பியது. ஆனால், நிரந்தர உறுப்பினர் தகுதியைப் பயன்படுத்தி பிரிட்டன் அரசு இப்புகாரை 'இந்திய-பாகிஸ்தான் பிரச்னை' என சூசகமாகத் திருப்பியது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சீன குடியரசு ( Republic of China) இடம்பிடித்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் (1948 லிருந்து 1971), இந்திய-பாகிஸ்தான் பிரச்னை தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இந்தத் தீர்மானங்களில் சீன குடியரசு எந்தத் தலையீடும் செய்யவில்லை.
1971 அக்டோபர் 25ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தின் இரண்டாயிரத்து 578ஆவது தீர்மானம் மூலம், அன்றைய சீன குடியரசின் உறுப்பினர் தகுதிநீக்கப்பட்டு இன்றைய சீன மக்கள் குடியரசு ( People's Republic of China) உறுப்பினரானது. இதனை எதிர்த்து வாக்களித்த 76 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
வங்கதேசம்
1971 டிசம்பரில் இந்திய-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசம்) சுதந்திரம் பெற்றது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
1972 ஆகஸ்ட்டில் சுதந்திரம் பெற்ற வங்கதேசத்தை ஐநா உறுப்பினராக ஏற்றுக்கொள்ள ஐநா பாதுகாப்பு சபையில் சீன மக்கள் குடியரசு முதல்முறையாக விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி (எதிர்த்து வாக்களிப்பது) பதிவிட்டது.
இந்திய-பாகிஸ்தான் பிரச்னை தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபை ( சீனா உள்பட) 18ஆவது, கடைசித் தீர்மானம் 1971 டிசம்பர் 21ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில் மூன்று பிரச்னைகள் அணுகப்பட்டன. அவை:
- வங்க தேசத்தில் போர் நிறுத்தம்,
- போர்க் கைதிகளாக இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரை எப்படி நடத்துவது,
- இந்திய-பாகிஸ்தான் போர்நிறுத்த எல்லைக்கோட்டின் (Cease Fire Line) உறுதித் தன்மை
இந்தப் பிரச்னைகளை இருதரப்புப் பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்து கொள்வதாக ஐநாவிடம் இந்தியா தெரிவித்திருந்தது.
ஐநா தீர்மானங்கள் செல்லாது
1972 ஜூலை 2ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது ஐநா ஒப்பந்த தரவுத்தளத்தில் (UN Treaty Database - Number 12308 Volume 858) ஆவணப்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இருநாட்டிற்கும் இடையேயான பிரச்னைகளை இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதவிர, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த ஒப்பந்தம் செல்லுமென்பதால், அக்கவுன்சிலில் முன்னர் எடுக்கப்பட்ட அத்தனை தீர்மானங்களும் செல்லாததாகிறது.
ஆக்கிரமிப்புப் பகுதியைத் தக்கவைத்துக் கொள்ளும் சீனா
இந்திய-பாகிஸ்தான் பிரச்னையை ஐநாவில் மீட்டெடுப்பதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள 43 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட நிலப்பகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதே அதன் முதன்மை எண்ணமாகும்.
சீனாவின் இலக்குத் திட்டமான சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துக்கு (China Pakistan Economic Corridor) இந்த நிலப்பகுதி இன்றியமையாதது.
இதன் காரணமாகவே, 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று இந்திய அரசு மேற்கொண்ட காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்க நடவடிக்கையை சீனா எதிர்க்கிறது. ஜம்மு-காஷ்மீரில், தான் ஆக்கிரமித்துள்ள பகுதி எங்கு கைநழுவிச் சென்றுவிடுமோ என சீனா அச்சப்படுகிறது.
உலகின் வல்லரசு நாடுகளுக்கிடையே நிலவிவரும் கருத்து வேறுபாடு காரணமாக, இந்தியாவுக்கு எதிராக ஐநாவில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், பாலஸ்தீனம், ஏமன், சிரியா ஆகிய நாடுகளில் அமைதி, பாதுகாப்பினை சீனா கோட்டைவிட்டதென்றே சொல்ல வேண்டும்.
1949 டிசம்பர் 30ஆம் தேதி சீன மக்கள் குடியரசை ஏற்றுக்கொண்ட ஒரே சோசலிச கொள்கையற்ற நாடு இந்தியா மட்டுமே. இந்த நிலையில், இந்திய-பாகிஸ்தான் பிரச்னையை சீனா கையில் எடுத்துள்ளதே முரணாகும்.