புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்டவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் கரோனா தொற்று நோய் இல்லை.
வெளிநாட்டில் இருந்து வந்த ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரி மக்களை கைகூப்பி கேட்டு கொள்கிறேன் யாரும் வீட்டை விட்டு வெளிய வர வேண்டாம். அத்தியாவசிய துறைகளைத் தவிர மற்ற துறைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பதால் யாரும் அலட்சியம் கொள்ள வேண்டாம் என வலியுறுத்துகிறேன்.
பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இடைக்காலமாக புதுச்சேரிக்கு 200 கோடி ரூபாய் நிதி வழங்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசிடம் கேட்ட நிதி இன்னும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தொடங்கப்பட்ட முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, மக்களவை உறுப்பினர் ஓய்வூதியமாக பெற்ற 45 ஆயிரம் ரூபாய்யை, நிதியாக முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு மீறல்: இளைஞர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை