புதுச்சேரி மாநிலத்தில் 15 மையங்களில் இன்று (செப்.13) நீட் தேர்வு நடைபெற்றது. இதில், 1,137 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பல்வேறு தேர்வு மையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மூலக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நீட் தேர்வு மையத்திற்கு சென்ற முதலமைச்சர், தேர்வு மையங்களில் செய்த ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.
அப்போது அங்கு கூடிய பெற்றோர், “இந்தத் தேர்வு அவசியமா?” எனக் கேள்வி எழுப்பினர். அப்போது, ”நான் மத்திய அரசிடம் இதற்காக வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது” என அவர் பதிலளித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கரோனா பரவலால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தும், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வரும் காலத்தில் மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், நீட் தேர்வை ரத்து செய்வோம்”என்றார்.
அடாவடித்தனமாக மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி வருகிறது என்றும் முதலமைச்சர் நாராயணசாமி ஆதங்கப்பட்டு பேசினார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை : மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு