சத்தீஸ்கர் மாநிலத்தில் புதன்கிழமை (மே 13) அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் விளைப்பொருள்களுக்கு நல்ல வருவாயை வழங்குவதற்கும், பயிர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் மே 21 முதல் 'ராஜிவ் காந்தி கிசான் நயோ யோஜனா' திட்டம் தொடங்க முடிவுசெய்யப்பட்டது.
இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் தயாரிக்கப்பட்ட, வெளிநாட்டு மதுபானங்களுக்கும் சிறப்பு 'கரோனா வரி' விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் ஒரு பாட்டிலின் விலை ரூ.10 வரை அதிகரிக்கும். வெளிநாட்டு மதுபானங்களுக்கு 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும்.
'ராஜிவ் காந்தி கிசான் நயோ யோஜனா' திட்டத்தின்கீழ், நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை வாங்குவதற்காக நேரடி நன்மை பரிமாற்றத்தின் மூலம் விவசாய உள்ளீட்டு உதவி மானியமாக ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் விவசாயிகளின் கணக்குகளில் வைப்புத்தொகையாகச் செலுத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், "இந்தத் திட்டம் ராஜிவ் காந்தி மரணம் நிகழ்ந்த தேதியில் அவரின் நினைவாக தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஐந்தாயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் மூலம் சிறப்பான ஆங்கிலம், இந்தி நடுத்தர பள்ளிகளையும் நடத்த அமைச்சரவை முடிவுசெய்தது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சுமார் 40 ஆங்கில, இந்தி பள்ளிகள் மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளன. மேலும், சத்தீஸ்கரின் நகர்ப்புறத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டை வழங்கும் நோக்கத்துடன், மோர் அவாஸ் மோர் மாகன் திட்டத்தின்கீழ் 40 ஆயிரம் கூடுதல் வீடுகளை நிர்மாணிக்கவும் மாநில அரசு முடிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மகாராஷ்டிராவுக்கான ஜிஎஸ்டி பங்கை வழங்க வேண்டும்'- பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை