நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் ஆகஸ்ட் 14ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்க்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது.
கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப்பாதையை அடைந்த சந்திரயான் 2 விண்கலம், 28ஆம் தேதி மூன்றாவது வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இதனையடுத்து, நான்காவது முறையாக சுற்றுப்பாதையை இன்று மாலை 6.18 மணியளவில் வெற்றிகரமாக மாற்றி அமைத்துள்ளது இஸ்ரோ. மேலும், நிலவின் குறைந்தபட்சமாக 124 கி.மீ தூரத்திலும், , அதிகபட்சமாக 164 கி.மீ தூரத்திலும் சந்திரயான் 2 விண்கலம் சுற்றிவருகிறது.
மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் நிலவிலிருந்து 100கி.மீ தூரமாக மாற்றி அமைக்கப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது. தொடர்ந்து விக்ரம் விண்கலம், சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.