நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒருசேர நடைபெற இருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து ஏழாவது முறையாக சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சந்திரபாபு நாயுடு கூறுகையில்,
"ஆந்திராவின் வளங்களை கேசிஆர் (கே சந்திரசேகர ராவ்) நோட்டமிடுகிறார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மூலம் மறைமுகமாக ஆந்திராவில் எங்கள் ஆட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார். ஜெகனும் கேசிஆருக்கு இணைந்து செயல்படுகிறார்.
ஆந்திரபிரதேசத்தில் கேசிஆர் அரசியல் களத்தில் விளையாடுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்தால், எந்தவித முதலீட்டாளர்களும் ஆந்திராவில் தொழில் தொடங்க முன்வர மாட்டார்கள். ஜெகன் மீது அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ தொடர்ந்துள்ள வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.