புதுச்சேரி வர்த்தக சபைக் கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாக சென்னையைச் சேர்ந்த புத்தக நிலையம் இயங்கி வந்துள்ளது. வர்த்தக சபைக்கு கடந்த சில ஆண்டுகளாக வாடகைத் தொகையை புத்தக நிலையம் செலுத்தவில்லை என்று வர்த்தக சபையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், வாடகையை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட புத்தக நிலையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னரும் வாடகை செலுத்தவில்லையென்றும், புத்தக நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வர்த்தக சபையினர் புதுச்சேரி நீதிமன்றத்தை நாடினர்.
இதில், வாடகை செலுத்தாமல் இயங்கிவந்த கடையை காலி செய்து தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, புதுச்சேரி பெரியகடை காவலர்கள் செந்தில் தலைமையில் வர்த்தக சபை கட்டடத்திற்கு சென்று பூட்டப்பட்டிருந்த புத்தக நிலையத்தின் பூட்டை நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் உடைத்தனர்.
பின்னர் உள்ளே இருந்த புத்தகங்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.
இதையும் படிங்க: சோடா பாட்டிலால் காதலியின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த காதலன்