சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங் உதவியாளர் ஓம் பிரகாஷ் குப்தா, 16 வயது சிறுமியை பாலியில் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஓம் பிரகாஷ் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவல் துறை உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஓம் பிரகாஷ் 16 வயது சிறுமியின் படிப்பை தான் கவனித்துக்கொள்வதாக அச்சிறுமியின் பெற்றோருக்கு வாக்குக் கொடுத்துள்ளார். இதனால் 2015ஆம் ஆண்டு அச்சிறுமியை, அவரது பெற்றோர் ஓம் பிரகாஷிடம் விட்டுச் சென்றுள்ளனர்.
அப்போது 2016ஆம் ஆண்டு தொடங்கிய பாலியல் அத்துமீறல், டிசம்பர் 2019ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளது. ஓம் பிரகாஷ் நயா ராய்ப்பூரிலுள்ள தனது வீட்டில் வைத்து பலமுறை சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே கூறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் அந்தச் சிறுமியை மிரட்டியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அச்சிறுமியை வீட்டு வேலை செய்யவும், ஓம் பிரகாஷூக்கும் அவரது மனைவிக்கும் மசாஜ் செய்யவும் வற்புறுத்தியுள்ளனர்.
அப்பகுதியுள்ள, அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் அப்பெண் சமீபத்தில்தான் பள்ளியிலுள்ள விடுதியில் சேர்ந்துள்ளார். அங்கிருந்து அவர் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டதால், இந்தக் கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஓம் பிரகாஷ் குப்தா, பாஜக துணைத் தலைவர் ராமன் சிங்கிடம் கடந்த 15 ஆண்டுகளாக உதவியாளராகவுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ராமன் சிங் கூறுகையில், "இதுதொடர்பாக காவல் துறையிடம் விவரங்களை கோரியுள்ளேன். இதுகுறித்து இப்போது பதில் அளிப்பது சரியாக இருக்காது" என்றார்.
இதையும் படிங்க: குஜராத்தில் ஐஎஸ் பயங்கரவாதி கைது - நடந்தது என்ன?