டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, கட்சியில் சில மாற்றங்களைக் கொண்டுவர கட்சியின் மூத்தத் தலைவர்கள் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, பிரியங்கா காந்திக்கு முக்கியத்துவமளித்து மக்கள் மத்தியில் ஆதரவை பெருக்க கட்சி முயன்றுவருகிறது. இந்நிலையில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.
மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரியங்கா காந்தியை மாநிலங்களவை உறுப்பினராக்கலாம் என கட்சி வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியான நிலையில், சத்தீஸ்கர் மாநில அமைச்சர் முகமது அக்பர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "சத்தீஸ்கரிலிருந்து பிரியங்கா காந்தியை மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்கு மாநில காங்கிரஸ் ஆலோசித்துவருகிறது. மாநிலத்தில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. தேர்தலுக்கான படிவத்தை நிரப்பினாலே வெற்றி உறுதி. ஆனால், இறுதி முடிவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர்தான் எடுக்கவுள்ளனர்" என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சியிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரியங்கா காந்தி?