நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது நான்காம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளின் மூலம் குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் தவிர மற்றவை வழக்கம் போல இயங்கினாலும், பணியாளர்கள் பெருமளவு குறைக்கப்பட்டு இன்றும் மக்கள் வேலைவாய்ப்பின்மையால் தவித்துவருகின்றனர். மக்களின் கைகளில் பண இருப்பு நாளுக்கு நாள் முற்றிலும் குறைந்துவரும் நிலையில், மத்திய அரசு 5 விழுக்காடு பேரிடர் வரியை ஜிஎஸ்டி மூலம் விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், இது ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து சிந்திக்கவேண்டிய காலம் அல்ல. தற்போது மக்களின் கைகளில் பண புழக்கத்தை அதிகரிக்கவேண்டிய காலம். அதற்காக அவர்களுக்கு மத்திய அரசு நேரடியான உதவிகளை அளித்திருக்கவேண்டும். ஆனால், மத்திய அரசு குதிரை முன் வண்டியைக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளது.
ஊரடங்கின் காரணமாக நெருக்கடிகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தயாரிக்கப்பட்ட பல பொருள்கள் கிடங்குகளில் பூட்டிக்கிடக்கின்றன. மக்களின் கைகளில் நேரடியாக பணம் கிடைத்தால் மட்டுமே கிடங்கிலிருக்கும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு மீண்டும் நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் மக்களின் கைகளில் பணம் வருவதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை நிதி ஆணையங்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசு ஒருபுறம் சந்தைக் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது. மறுபுறம் சில நிபந்தனைகளையும் முன்வைக்கிறது. இந்த நிபந்தனைகள் மாநில அரசின் உரிமைகளையும், அதிகாரங்களையும் பறிக்கும்விதமாக உள்ளது. இவற்றினை இதற்கு முன்னதாக எந்த மத்திய அரசுகளும் செய்ததில்லை.
இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலங்களுக்குமான தேவைகள் மாறுபடும். அவற்றின் தேவைகளை அறிய மத்திய அரசு தவறிவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேச உள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: 'பேரிடர் காலங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்'