உலக நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. சில மருந்துகள் மனிதர்கள் மீதான முதலாம், இரண்டாம் கட்ட பரிசோதனையில் நல்ல முடிவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் கரோனா மருந்துகளின் பரிசோதனை வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். அதற்கான முழு ஆதரவும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்படும். முதலாம், இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால மூன்றாம் கட்ட பரிசோதனையை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) விரைவாக நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்தான ChAdOxiஐ தயாரிப்பதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் அஸ்ட்ராஜெனெகாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதே போல் சீனாவின் தடுப்பூசி மருந்து பரிசோதனையும் வெற்றிகரமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலராக விரைவில் பொறுப்பேற்க போகும் மருத்துவர் பூஷண் கூறுகையில், "ஏற்கனவே கரோனா மருந்தின் பரிசோதனை வேகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு நல்ல முடிவு கிடைக்கும். கரோனா தடுப்பூசி மருந்து அங்கீகரிக்கப்பட்டவுடன் அதை உற்பத்தி செய்வது குறித்தும் விநியோகிப்பது குறித்தும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விவாதித்து வருகிறது.
கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு சுவாச பிரச்னை, ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்கள் வருவதாக தெரியவந்துள்ளது. இது குறித்து கண்காணிக்க பிரத்யேக குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான விரிவான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்படும். வால்வு சுவாசக் கருவி உள்ள N95 முகக் கவசங்களால் கரோனா தொற்றை முகக் கவசத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை. இதனால், அந்த முகக் கவசங்களை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.