கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இன்று தொடங்கியது.
மக்களவையின் இன்றைய முதல் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் (திருத்தம்) மசோதா 2020, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, தொழில்நுட்பம் (ஒழுங்குமுறை) மசோதா 2020, தகுதிவாய்ந்த இருதரப்பு வலையமைப்பு நிதி ஒப்பந்த மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020, காரணி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, 2020, வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2020 என எட்டு சட்ட முன்வரைவுகளை மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி அறிமுகப்படுத்தினார்.
2020 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதாவை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ரோசாஹேப் தாதராவ் டான்வே அறிமுகப்படுத்தினார்.
1955 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் புதிய திருத்தம் கோரும் இந்த சட்டம் உற்பத்தி, வழங்கல், விநியோகம், வர்த்தகம், நுகர்வு ஆகியவற்றில் மத்திய அரசின் அதிகாரத்தை வலுப்படுத்துகிறது.
2020 ஆம் ஆண்டில் உதவி தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) மசோதாவை கேபினட் அமைச்சர் ஹர்ஷ வர்தன் அறிமுகப்படுத்தினார். உதவி தொழில்நுட்ப சேவைகளின் பாதுகாப்பான பயன்பாடு மற்றும் நெறிமுறை நடைமுறைகளை தடுப்பதை மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
காரணி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2020, தகுதிவாய்ந்த இருதரப்பு வலையமைப்பு நிதி ஒப்பந்த மசோதா 2020 ஆகிய இரு மசோதாக்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
தகுதிவாய்ந்த நிதி ஒப்பந்தங்களின் இருதரப்பு வலையமைப்பை அமல்படுத்துவதன் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், இந்திய நிதிச் சந்தைகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் இது உதவுமென நிதிஅமைச்சர் கூறினார்.
உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி மேம்படுத்தல்) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய இரு மசோதாக்களை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். விவசாய விளைபொருள்களை விற்பனை செய்வது மற்றும் வாங்குவது தொடர்பான தேர்வு சுதந்திரத்தை விவசாயிகள், வர்த்தகர்களுக்கு இந்த திருத்தங்கள் அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
அக்டோபர் 1 ஆம் தேதி முடிவடையும் நாடாளுமன்றத்தின் இந்த 18 நாள் மழைக்கால கூட்டத்தொடர் அமர்வில் மத்திய அரசு 11 சட்டத் திருத்தங்களையும், 20 க்கும் மேற்பட்ட புதிய சட்ட முன்வரைவுகளையும் பாஜக கொண்டுவரவிருப்பது கவனிக்கத்தக்கது.