கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதியன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (செப்டம்பர் 16) மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.
அப்போது மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, "இந்திய ஒன்றியத்தின் தெற்கு மற்றும் வடகிழக்கில் உள்ள மக்கள், குறிப்பாக ஊர்ப்புற மக்கள் மத்திய அரசால் வெளியிடப்படும் அறிவிக்கைகளை, நிர்வாக தகவல்களை, ஆணைகளை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும் ?. எனவே, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது போல அனைத்து அட்டவணை மொழிகளையும் அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டும்" என கோரினார்.
இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், "அதிகாரப்பூர்வ மொழிச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை. இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி எனும் மும்மொழி கொள்கை நடைமுறையில் இல்லாத மாநிலங்களில், இந்தி அல்லாத மொழி பேசும் பகுதிகளில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் புரிதலுக்காக தகவல்களை பெயர்-பலகைகள் / அறிவிப்புப் பலகைகளில் (1) பிராந்திய மொழி, ( 2) இந்தி, (3) ஆங்கிலம் என வகையில் மொழிகளை மத்திய அரசு பயன்படுத்தும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொழித் தீர்மானத்தில் கூறப்பட்டவை நடைமுறையில் உள்ளது" என்றார்.