கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா தடுப்பூசியின் தளவாடங்கள், கொள்முதல் நெறிமுறை அம்சங்கள் மற்றும் நிர்வாகத்தை பரிசீலிக்கும் வகையில் நிபுணர் குழு ஒன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
மேலும், இக்குழுவிற்கு தேசிய நிபுணர் குழு என்ற பெயரிலும், நிதி ஆயோக்கின் உறுப்பினரான (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் தலைமையில் இந்தக் குழு செயல்படும் என்றும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், “பொருத்தமான தடுப்பூசி தேர்வை நெறிப்படுத்துதல், தடுப்பூசியை கொள்முதல் செய்தல், தடுப்பூசி வழங்குதல் மற்றும் தடுப்பூசி நிர்வகிக்கப்பட வேண்டிய குழுக்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.