கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் கரோனா பரவல் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில், மத்திய அரசு தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்திலுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு, தேவையான நேரத்தில் ஆக்ஸிஜன் சிலின்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மாநிலங்களுக்கு இடையேயான மருத்துவ ஆக்ஸிஜன் சிலின்டரிகளின் போக்குவரத்திற்கு எந்தவொரு மாநிலமும் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அறிவிறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களில் மூன்று முதல் ஐந்து விழுக்காடு நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,880 பேர் கோவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,42,663ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 96 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அட்டகாசமான சாதனம்!