சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தலைமையில் இருவர் கொண்ட மத்திய குழு மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள கரோனா மையங்களைப் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய லாவ் அகர்வால், 'மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் கண்காணிப்பு, மருத்துவ வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். மேலும் கரோனா அதிகமுள்ள கட்டுப்பட்ட பகுதிகளில் தேவைப்பட்டால், ஊரடங்கு உத்தரவையும் அமல்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.
நேற்றைய (ஜூன் 29) நிலவரப்படி, நாட்டில் இதுவரை 83,98,362 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5,48,318 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 3,21,722 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது 2,10,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 16,475 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 58.67 விழுக்காடாக உள்ளது.