ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஜார்க்கண்ட் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங், மாநிலத் தலைவர் ராமேஷ்வர் ஓரான், எதிர்கட்சித் தலைவர் ஆலம்கீர் ஆலம் மற்றும் கூடுதல் பொறுப்பாளர் மெயினுல் ஹாகு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக பேசிய ஜார்கண்ட் மாநில பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங், “பாரதிய ஜனதா யாருடன் கூட்டணி வைத்துள்ளது, யாரை கூட்டணிக்கு அழைப்பது என்று அக்கட்சிக்கே தெரியாது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு வழங்கவுள்ளது” என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகா கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா விரும்புகிறது. எனினும் அந்தக் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. பாஜக கூட்டணியிலுள்ள ஜார்க்கண்ட் மாணவர் சங்க கட்சி 15 இடங்களையும், லோக் ஜன சக்தி ஆறு இடங்களையும் கேட்டுள்ளன. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!