கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சோதனையை முடுக்கிவிடுவதில் நாடு கவனம் செலுத்தியதன் பயனாக, செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி.சி.எம்.பி.) நேர விரயம் இல்லாமல் குறைந்த செலவில் கரோனா நோய்க் கிருமியைக் கண்டறியும் சோதனையைக் கண்டுபிடித்துள்ளது.
இது நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஆர்டி-பி.சி.ஆர். பரிசோதனைத் திறனை பல மடங்குகள் மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தப் புதிய முறையில், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை விடிஎம் (வைரல் டிரான்ஸ்ஃபர் மீடியம்) மூலம் வைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதனை உலர்ந்த நிலையில் சில நிமிடங்களில் தலைகீழ் டிரான்ஸ்கிரிப்டேஸ்-பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (ஆர்.டி-பி.சி.ஆர்.) சோதனைக்குத் தயார்படுத்த முடியும் என சி.சி.எம்.பி. இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
"வி.டி.எம் இல்லாமல் மாதிரியைக் கொண்டு செல்வதும், சோதனையில் ஆர்.என்.ஏ.வை பிரித்தெடுக்கும் செயலைக் கையாள்வதும், சோதனை முடிவுகளின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும். எனவே, இப்போது அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கொண்டு சோதனைகளை மேற்கொள்ள முடியும்" என்று அவர் கூறினார்.
இந்த ஆராய்ச்சி முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் சமர்ப்பித்துள்ளதாக ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். இதற்கான அனுமதி வழங்கப்பட்டவுடன், இம்முயற்சி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.