சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மாதம் நடைபெறும். ஆனால், இந்தாண்டு தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், "அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் தேர்வுகள் நடத்துவது குறித்து எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை. தேர்வுகள் தொடர்பான வழிமுறைகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும். இந்தாண்டு, ஜனவரி - பிப்ரவரி மாதம், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படாது" என்றார்.
வழக்கமாக செயல்முறை தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும். இன்று நடைபெற்ற 22ஆவது ஷிக்சா சம்வாத் நிகழ்ச்சியில், இணைய வழி கல்வி, பொதுத் தேர்வு, நுழைவு தேர்வு, ஆசிரியர்கள் பயிற்சி, விடைத்தாள் திருத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரமேஷ் பொக்ரியால் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதில் பங்கேற்று கல்வி தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அமைச்சர் பதில் அளித்தார். பொதுத் தேர்வுகள் இணைய வழியாக நடத்தப்படாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.