பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்தத் தலைவர் அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பினை பல்வேறு கட்சியினரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், இது குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் டி.ராஜா, ”இன்றைக்கு வழங்கியிருக்கிற தீர்ப்பு அரசு இயந்திரத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது” எனத் தெரிவித்தார்.
"இந்தத் தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இன்று வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் மீதும் அரசாங்க நிறுவனத்தின் மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதுபோன்ற ஒரு தீர்ப்பை மக்கள் எதிர்பார்க்கவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டது உண்மை. பொது இடத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது. இதற்கான ஆதராங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இச்சம்பவத்திற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என சிபிஐ கூறியதாக தீர்ப்பில் தெரிய வருகிறது. இதற்கு முன்பு அயோத்தி வழக்கில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. சிபிஐயின் செயல்திறன்தான் என்ன? மத்திய அரசு ஒரு பாசிச அரசு" என்றார்.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வால் பழங்குடியினப் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "உத்தரப் பிரதேச அரசு சட்டம் ஒழுங்கைக் காக்க தவறிவிட்டது. அரசியலமைப்பின் மதிப்பைக் காப்பதில் தோல்வியுற்றுவிட்டது. மேலும், இச்சம்பவத்தை மறைக்க அம்மாநில அரசு முயற்சிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: ’பாபர் மசூதி தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு’ - ஸ்டாலின்