ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிபிஐ அலுவலர்கள் தங்கள் விசாரணையை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கேட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
எதிர்க்கட்சிகள், தேசிய மகளிர் ஆணையம், நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் அழுத்தம் காரணமாக மாநில அரசு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியது.
இதையடுத்து, கடந்த மாதம் ஹத்ராஸில் உள்ள புல்காரி கிராமத்திலுள்ள கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்ற சிபிஐ அலுவலர்கள், அவரது குடும்பத்தினரிடம் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண் மூர்ச்சை நிலையில் கண்டெடுக்கப்பட்ட இடம், எரியூட்டப்பட்ட இடம் ஆகியவற்றுக்கும் சென்று அவர்கள் விசாரணை செய்தனர்.
அதன் பின்னர் இரண்டாவது முறையாக கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாக்குமூலத்தை பெற்ற சிபிஐ அதிகாரிகள், இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தீப், ரவி, ராமு, லவ்குஷ் ஆகியோரின் குடும்பத்தினரையும் விசாரித்தனர்.
இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஹத்ராஸ் செல்லும் சிபிஐ அலுவலர்கள் அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த தீவிர விசாரணைக்குப் பின் வழக்கின் பின்புலம் கிடைத்தவுடன் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நிதியுதவி அளித்த தமிழ்நாடு, டெல்லி அரசுகளுக்கு நன்றி கூறிய தெலங்கானா முதலமைச்சர்