ஹத்ராஸ் விவகாரம் குறித்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு பரிந்துரை செய்து எட்டு நாள்கள் ஆன நிலையில், சிபிஐ அலுவலர்கள் தங்களின் விசாரணையை இன்று தொடங்கியுள்ளனர். கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கின் விசாரணையை தொடங்க சிபிஐக்கு மத்திய அரசு இன்று நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 14ஆம், தனது தங்கையை குற்றம்சாட்டப்பட்ட நால்வர் வயலில் இழுத்து சென்று கழுத்தை நெரித்துள்ளனர் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் புகார் அளித்துள்ளார். உத்தரப் பிரதேச அரசு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து மத்திய அரசின் நோட்டீஸ் அனுப்பியது. எனவே, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு செல்லும் சிபிஐ, தடயவியல் நிபுணர்களின் உதவியோடு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம்செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.